ஜூலை 19 கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!
ஜூலை 19 கு பின் தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நேரத்தில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கில் வழங்கப்படும் தளர்வுகள் குறித்து இன்று முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். அதில் திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,500க்கு குறைவாக பதிவாகி வருகிறது. ஜூலை 19 வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது
ஜூலை 19 ஆம் தேதி காலை 6 மணி உடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகள் குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் பல கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது.
அதன்படி காய்கறி, மளிகை கடைகள், மால்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ஓட்டல்கள், பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவை காலை முதல் இரவு வரை 9 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் ஊரடங்கு தளர்வுகளில் இது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனவும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் வர வாய்ப்புள்ளதால் தளர்வுகள் அளிப்பதில் கூடுதல் கவனம் தேவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி
